Add to Google

Monday, 20 May 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டு வரை இந்த கலந்தாய்வுக்கு தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 20,203 தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதன்முறையாக மாவட்டங்களில் நடைபெறுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறையில் உயர் அலுவலர்களில் ஒருவரை பார்வையாளராக அனுப்பி வைத்துள்ளோம். அந்த அடிப்படையில் நான் (இயக்குநர்) மதுரையில் நடைபெற்ற கலந்தாய்வை ஆய்வு செய்தேன். இன்னும் பல தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆங்கில வழி வகுப்புகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், எந்தெந்தப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு துவக்க பெற்றோர்கள் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்படுகிறதோ, அந்தப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு வகுப்பு துவக்கப்படும். அதேசமயம், அந்தப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வி வகுப்பும் தொடர்ந்து இருக்கும். ஆங்கில வழிக் கல்வி பாடங்களை நடத்துவதற்கு போதுமான தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கெனவே பணியில் இருக்கின்றனர். ஏதாவது சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி போதிக்க ஆசிரியர்கள் தேவைப்பட்டால், அதற்கான ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருக்கிறது. மேலும், விரைவில் டிஆர்பி மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம்: ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பித்து, பரிசீலித்து முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களே எந்தெந்தப் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தேவையோ, அதற்குரிய அனுமதியைப் பரிசீலித்து வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் விவரத்தை கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வித் துறைக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஆன்-லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய வசதியாக, பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது.

கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை சான்றளிப்புக்கு பள்ளித் தேர்வுத் துறையில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

பேட்டியின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி உடன் இருந்தார்.

IGNOU-Hall Tickets for June 2013, Term End Examination.

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள்.

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2மாணவர்களுக்காக இந்த ஆண்டு மொத்தம் 93 லட்சத்து 78 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் போன்ற சில பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டும் இன்னும் தயாராகவில்லை. கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அவை தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  வரும் கல்வியாண்டின் (2013-14) முதல் பருவத்தில் மொத்தம் 5.34 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இவற்றில் தற்போது 78 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 விற்பனைக் கிடங்குகளிலும், அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள  ்: இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்காக 67 லட்சத்து 76 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 100 சதவீத புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தப் புத்தகங்களில் 51 லட்சத்து 70 ஆயிரம் புத்தகங்கள் இலவசப் புத்தகங்கள் ஆகும். 16 லட்சத்து 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கான புத்தகங்கள் ஆகும். முதல் பருவப் புத்தகங்கள்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் 98 சதவீதம் அச்சிடப்பட்டுள்ளன. 6, 7, 8, 9 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவப் புத்தகங்கள் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அச்சிடப்பட்டுள்ளன. பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் வருகிற 25-ஆம் தேதிக்குள் அச்சிடப்பட்டுவிடும். மே 30-ஆம் தேதிக்குள் இவை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு பள்ளி திறக்கும்நாளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.பள்ளிப் படிப்பானாலும், பட்டப் படிப்பானாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. அவ்வாறு பதிவு செய்திருந்தால் மட்டுமே, சீனியாரிட்டி அடிப்படையில், அரசுப் பணி, ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.பதிவு செய்த அனைவருக்குமே அரசுப் பணி கொடுக்க முடியாது என்பதால், கடந்த தி.மு.க., ஆட்சியில், 300, 200, 150 ரூபாய் என்ற வகையில், பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மாதத்தில் ஒரு முறை, தனியார் நிறுவனங்களை அழைத்து, பதிவுதாரர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.மாநிலம் முழுவதும், தற்போதுள்ள 37 வேலைவாய்ப்பு மையங்களில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், 13.9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை, 82.7 லட்சமாக உள்ளது. இம்மாத இறுதிக்குள், மேலும்20 லட்சம் பேர், பட்டியலில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வந்து காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ஆன்-லைன் ; முறையில், படித்த பள்ளிகளிலேயே, பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு பெருமைப்படுகிறது. ஆனால், காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டுகொள்வதில்லை. பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, பதிவு புதுப்பிப்பதை, சம்பந்தப்பட்ட பதிவுதாரர்கள் தவிர்த்து வருகின்றனர்.அரசுக்கு எந்தவித வருவாயும் இல்லாமல் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகம் தேவைதானா? அதனால், மக்களுக்கு எவ்வித பயனுமில்லை; அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தான் பெருமளவில் பயனடைகின்றனர் என,கூறப்படுகிறது.
மாவட்ட பதிவுதாரர்கள் கூறியதாவது:
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கு, இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவற்றை மாற்ற, புதிய தொழில் நிறுவனங்களை துவங்கி, மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் முறையை, தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்தால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில், ஆட்களை பணிக்கு எடுத்துக் கொள்ள, அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்தவேண்டும்.பதிவு மூப்பு அடிப்படையில், அரசுப் பணியில் சேர்வதற்கு வாய்ப்புஅளிக்க வேண்டும். முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, பதிவுதாரர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் - நாளிதழ் செய்தி.

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் கட்டணத்தை தாறுமாறாக வசூலித்து வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தம் இஷ்டம்போல் கட்டணத்தை வசூலித்து வந்தனர். இதையறிந்த அப்போதைய தி.மு.க., அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தசாமி தலைமையில் கமிட்டி அமைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் அதில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தரத்தை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு பள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க.,தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. தனியார் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் போதுமானதாக இல்லை. எனவே இக்கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என முறையீடு செய்தனர்.அதன்படி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேல் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தைமறு பரிசீலனை செய்து உயர்த்தியது. திருத்தப்பட்ட கட்டணமும் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனியார் பள்ளிகள் தம் இஷ்டம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளன.அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவு தர வரிசையில் கடலூர் மாவட்டம் 31 இடத்தில் உள்ளது. அந்தளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், கடன் பட்டாலாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால்தனியார் பள்ளிகளில் பெற்றோர்களின் கூட்டம் அலைமோதுகிறது.இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் தம் இஷ்டம்போல் கட்டணத்தை "கறந்து" வருகின்றனர். பிளஸ் 2 மாணவனுக்கு சேர்க்கை கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளிக்கூட பிளஸ் 2 சேர்க்கைக்கு வெறும் 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் தரமற்ற கல்வி கொடுக்கும் பள்ளிகள் எல்லாம் கட்டணத்தை மட்டும் குறைப்பதில்லை.இன்னும் ஒரு சில பள்ளிகள் கோவிந்தராஜ் கமிட்டி நிர்ணயித்த குறைவான கட்டணத்திற்கும், தற்போது பெறப்படும் சிங்காரவேலு கமிட்டியின் கட்டணத்திற்கும் இடையே உள்ள வித்தியாச கட்டணத்தை2 ஆண்டுகள் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.இது ஒரு புறமிருக்க கடலூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்று பிரி.கே.ஜி., க்கு 20 ஆயிரம் ரூபாயும், மீண்டும் முதல் வகுப்பில் சேர்க்கைக்காக 10 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.இப்படி ஒவ்வொரு பள்ளியும் கல்வி என்ற பெயரால் பெற்றோர்களிடம்கடுமையாக பணத்தை கறந்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், வாய்மூடி மவுனம் சாதித்து வருகின்றனர்

தலைமை ஆசிரியர் பதவிக்கு கடும் போட்டி: முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு - நாளிதழ் செய்தி

தலைமையாசிரியருக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில், முக்கிய பள்ளிகளை பிடிப்பதில், ஆசிரியர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடம் பட்டியல் வெளியிடாததால், முறையாக நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், தெற்கு அரசு ஆண்கள், மகளிர், பரமத்தி ஆண்கள் மற்றும் மகளிர், செல்லப்பம்பட்டி, திருமலைப்பட்டி, எர்ணாபுரம், பழையபாளையம், திருச்செங்கோடு மகளிர், இறையமங்கலம், குமாரபாளையம் மகளிர், ராசிபுரம் அண்ணாசாலை மற்றும் சிவானந்தா சாலை, தோ.ஜேடர்பாளையம், நாமகிரிப்பேட்டை ஆண்கள், முத்துகாப்பட்டி, பாலப்பட்டி ஆகிய, 17 மேல்நிலைப்பள்ளிகளில், தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.அதில், பரமத்தி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர், டி.இ.ஓ., பதவி உயர்விலும், எர்ணாபுரம் அரசு பள்ளி ஹெச்.எம்., பதவி உயர்வு, நாமக்கல் மகளிர் மற்றும் செல்லப்பம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர், பணி ஓய்வும் பெற்றனர். திருமலைப்பட்டி தலைமை ஆசிரியர், வி.ஆர்.எஸ்.,ல் சென்றுவிட்டார். மற்ற பள்ளிகளில் காலிப்பணியிடம் நீடித்து வருகிறது.அப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொது மாறுதல் கவுன்சலிங், நாளை (மே 20), நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில்நடக்கிறது. முக்கிய பள்ளிகளை பிடிக்க, ஆசிரியர்கள் மத்தியில்,கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆன்லைன் கவுன்சலிங் முறையாக நடக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.காரணம், காலிப்பணியிடம் குறித்த விபரங்களை, கவுன்சலிங் துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை, காலிப்பணியிடம் குறித்த விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதனால், முக்கிய பள்ளிகளை,"பிளாக்" செய்து வெளியிட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதன் மூலம், முறைகேடு நடக்கும் என, குற்றம் சாட்டப்படுகிறது.எவ்வித ஒளிவு மறைவும் இன்றி, நேர்மையான முறையில், பள்ளித் தலைமையாசிரியருக்கான கவுன்சலிங் நடத்தினால், தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வாய்ப்பு கிடைக்கும். ஆனால், காலிப்பணியிடம் குறித்த பட்டியல் வெளியிடாததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், இடமாறுதல் கவுன்சலிங், சென்னையில் நடந்து வந்தது. கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தப்படுவதால், ஆசிரியர்களுக்கு எவ்வித சிரமம் இல்லை. இது வரவேற்கத்தக்க ஒன்று. நாளை (மே 20), முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பொது இடமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், 17 பள்ளிகளில், தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.கவுன்சலிங் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன், காலிப்பணியிடம் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை அப்பட்டியலில் வெளியிடாததால், முறையாக நடக்குமா என்பது சந்தேகமே. அதிலும், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.