Add to Google

Wednesday, 3 October 2012

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி

மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை. இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும்.
தொடர் அங்கீகாரம் வழங்குவதில் அலைகழிப்பு, எதிர்பார்த்த கட்டணம் நிர்ணயிக்காதது, பெற்றோர்-பள்ளி நிர்வாகிகளிடையே, அவ்வப்போது வெடிக்கும் பிரச்னை, பெற்றோர், மாணவர் விரும்பும் பாடத் திட்டங்களை வழங்க முடியாத நிலை போன்ற காரணங்களால், சி.பி.எஸ்.இ., பக்கம் தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களது பார்வையை திருப்பியுள்ளனர்.
தமிழகத்தில், ஏற்கனவே 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது. பெரிய இட வசதியுள்ள, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள், பக்கத்திலேயே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, விண்ணப்பித்து வருகின்றனர்.
மெட்ரிக் பள்ளிகளை அப்படியே மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆரம்பிப்பதற்கு, சட்டத்தில் வழிவகை இல்லை. இதனால், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, ஒரு கட்டத்தில் பள்ளியை மூடிவிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்கவும், சில பள்ளி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தனியார் பள்ளி ஒன்றின், தாளாளர் ராம சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள், இங்குள்ள பள்ளிகளில் மொழிப்பாடமாக இருக்க வேண்டும் என, பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், அதுபோல் வாய்ப்பு இல்லை.

சி.பி.எஸ்.இ., போர்டு, தரமான கல்வி திட்டம் வழங்குவதுடன், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தற்போது சீன மொழியை கற்பிக்கவும் வழிவகை செய்கிறது. ஒருமுறை அங்கீகாரம் பெற்றுவிட்டால், அதன்பின் தொடர் பிரச்னைகள் கிடையாது. இதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்குவதில், பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றாஅர்.
சோடை போகவில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகளின் கருத்து குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்து, விண்ணப்பிப்பவர்களுக்கு, தடையில்லா சான்று வழங்குகிறோம். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புதிதாக வருவதால், மாநில பாடத் திட்டம் சோடை போனதாக அர்த்தம் கிடையாது என்று தெரிவித்தன.

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ரத்து

போட்டித் தேர்வு மூலம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 895 பேரை தேர்வு செய்து வெளியிட்ட பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நிபுணர் குழு சமர்ப்பித்த முக்கிய விடைகள் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்
திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு மே மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
போட்டித் தேர்வுக்கான முக்கிய விடைகளும், தேர்வு பெற்றவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில் பல முக்கிய விடைகள் தவறாக உள்ளதாகக் கூறி தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்தத் தேர்வில் விடைத்தாள்கள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகள் பல தவறானவை. அவற்றை அடிப்படையாக வைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இதனால் சரியாக விடையளித்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இடஒதுக்கீடு முறையையும் சரியாக பணி நியமனத்தில் பின்பற்றவில்லை என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு விடைகளை ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்றை அமைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் திங்கள்கிழமை (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி எஸ். நாகமுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவு விவரம்:
ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்த முக்கிய விடைகளில் (ஓங்ஹ் ஹய்ள்ஜ்ங்ழ்ள்) 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறானவை என நிபுணர் குழு கூறியுள்ளது. இந்த விடைகள் அடிப்படையில்தான் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையையும் தேர்வு வாரியம் சரியாக அமல்படுத்தவில்லை. உதாரணமாக எஸ். செல்வி என்பவர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பொதுப் பிரிவில்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்டவர் (பெண்கள்) என்ற இடஒதுக்கீட்டுப் பிரிவில் அவரை தேர்வு செய்துள்ளனர். அவரைப் போலவே அதிக மதிப்பெண்கள் பெற்ற பலரும் பொதுப் பிரிவுக்குப் பதிலாக இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயலால் தகுதியுள்ள ஏராளமானோர் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, 2,895 பேர் அடங்கிய இந்தப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும். தேர்வு எழுதியவர்கள் பெற்ற புதிய மதிப்பெண்கள் விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும். இந்தப் பணிகளை மூன்று வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி நாகமுத்து தனது உத்தரவில் கூறியுள்ளார்.

TET தனி பாடங்கள்

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல...

பல தகுதியற்ற ஆசிரியர்களை உருவாக்கிய பின் ”ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தொழில் பாடம் ” என்றொரு பாடம் B.Ed படிப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளீடு செய்யப்பட்டு தனியாக வகுப்புகள் மூலம் இந்த பயிற்சி பயிற்சி நிறுவனங்களின் மூலம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் tnteu Vice Chancellor. திரு. ஐி. விஸ்வநாதன் அவர்கள்.

அப்படி என்ன பாடத்திட்டம்?

கொஞ்சம் கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்..

http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

மேலே உள்ள லிங்கின் மூலம் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடதிட்டத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

இதனை பதிவிறக்கம் செய்து அதன்படி தேர்விற்கு தயாராக வேண்டிய அவசியமே இல்லை... காரணம் இதில் 1-8 வகுப்பு வரை உள்ள பாடதிட்டத்தின் தொகுப்பே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் தகுதித் தேர்வில் பாதி வினாக்களுக்கு மேல் இந்த பாடதிட்டத்தினை கடந்த ஆசிரியர்களின் திறனை சோதிக்கும் வினாக்கள்தான் வினவபட்டன..

எனவே முதலில் இந்த பாடதிட்டத்தினை முழுவதுமாக இதுதான் என்று TRB கொடுக்க வேண்டும் என்பது தேர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்பாக உள்ளது.

சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வால் கடந்த சில ஆண்டுகளாக படுத்திருந்து B.Ed , D.T.Ed மோகம் இப்போது அதிகரித்துள்ளது இதற்கு காரணம் தேர்வினை எழுதி தேர்ச்சி அடைந்து வேலைக்கு சென்று விடலாம் என்ற படிப்பவரின் விருப்பம்தான்..

ஆனால் இதுவரை 7 லட்சம் பேர் இதற்காக பல ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை பணத்தினை கல்வி நிறுவனங்களில் கொடுத்து படித்துவிட்டு காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

மேலும் 12 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவதாக மனிதவளத்துறை அறிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்  7 லட்சம் ஆசிரியர்கள் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்ற வீணான வார்த்தைகளை நம்பி யாரும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தினை விட அதிகமாக கட்டணம் செலுத்தி B.Ed கல்லூரிகளிலும்... ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என அனைத்தினையும் அலசி ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.